பயங்கரவாதம் பற்றி இஸ்லாத்தின் கருத்தென்ன

Tamil • MyIslam24

பயங்கரவாதம் பற்றி இஸ்லாத்தின் கருத்தென்ன?

இஸ்லாம் இரக்க சிந்தனையுள்ள ஒரு மார்க்கமாகும். இஸ்லாம் ஒரு போதும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதில்லை. அருள்மறை குர்ஆனில் இறைவன் கூறுகிறான்:

''மார்க்க( விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்கவில்லை: நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான்."
(அத்தியாயம் 60 - 8வது வசனம்).

இறைவனின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் போரில் பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லாதீர்கள் என போர் வீரர்களை தடுத்திருக்கிறார்கள்.
(ஆதார நூல்: முஸ்லிம் - ஹதீஸ் எண்: 1744 புகாரி - ஹதீஸ் எண்: 3015).

''நம்பிக்கைத் துரோகம் செய்யாதீர்கள் வரம்பு மீறாதீர்கள்: குழந்தைகளைக் கொல்லாதீர்கள்"" என போர் வீரர்களுக்கு கட்டளையிட்டுள்ளார்கள் இறைவனின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள். (ஆதார நூல்: முஸ்லிம் - ஹதீஸ் எண்: 1731 திர்மிதி - ஹதீஸ் எண்: 1408).

''இஸ்லாமியர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவர்களை யார் கொல்கிறாரோ (சுவனத்தின் வாசனை நாற்பது ஆண்டு தூர அளவு வீசினாலும்) அவர் சுவனத்தின் வாசனையைக் கூட நுகரமுடியாது"" என இறைவனின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதார நூல்: புகாரி - ஹதீஸ் எண்: 3166 இப்னு மாஜா - ஹதீஸ் எண்: 2686).

மேலும் இறைவனின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நெருப்பைக் கொண்டு தண்டனையளிப்பதை தடை செய்திருக்கிறார்கள்.
(ஆதார நூல்: அபூ -தாவத் - ஹதீஸ் எண்:2675).


இவையெல்லாம் போர் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய போதனைகள்; போர் என்றாலே, அதற்கு அர்த்தம் அத்துமீறுவதும் அழித்தொழிப்பதும் தான் என்று கூறும் அளவுக்கு போரினுடைய வரலாறுகளை நாம் அறிவோம். அப்படிப்பட்ட போரில் தான், இவ்வாறான போதனைகளை நபிகளார் போதித்துள்ளார்கள். பொதுவாக, பயங்கரவாதத்தை பற்றியோ கொலைகளை பற்றியோ பேசுகையில், அநியாயமாக ஒரு உயிரை கொல்வதை, அனைத்துலக மக்களையும் கொன்றதுக்கு நிகரான பெரும்பாவமாக வர்ணிக்கிறது குர்ஆன் (5:32)

கொலை செய்வதை பெரும்பாவங்களில் இரண்டாவது பெரும்பாவமாக குறிப்பிட்ட அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கொலை செய்பவர்கள் மறுமைநாளில் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் என எச்சரித்துள்ளார்கள்.
மறுமை நாளில் முதலாவதாக விசாரிக்கப்படுபவர்கள் மனித உயிர்களை அநியாயமாக கொலை செய்தவர்கள் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதார நூல்: முஸ்லிம் - ஹதீஸ் எண்: 1678 புகாரி - ஹதீஸ் எண்: 6533).

ஐந்தறிவு படைத்த மிருகங்களிடமும் கருணை காட்ட வேண்டும் என வலியுறுத்துவதோடு மிருகங்கள் துன்புறுத்தப்படுவதை இஸ்லாம் தடை செய்திருக்கிறது.;
''ஒரு பூனை இறக்கும்வரை கட்டிப்போட்டு சிறையிலடைத்த பெண்மணி தண்டனைக்கு உள்ளானாள். பூனைக்கு உணவோ தண்ணீரோ வழங்காமல் வெளியில் சென்று உணவு தேடுவதையும் தடுக்கும் வகையில் பூனையை கட்டிவைத்து துன்புறுத்திய காரணத்தினால் அப்பெண் நரகம் சென்றாள்."" என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதார நூல்: முஸ்லிம் - ஹதீஸ் எண்: 2422 புகாரி - ஹதீஸ் எண்: 2365)51

வழிப்போக்கர் ஒருவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அருகிலிருந்த ஒரு கிணற்றில் இறங்கி தனது தண்ணீர் தாகத்தைத் தணித்துக் கொண்டு வெளியே வந்தார் வழிப்போக்கர். வெளியே வந்த அவர், நாய் ஒன்று தனது நாக்கினை மண்ணில் தடவி தண்ணீர் தாகத்தைத் தணிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதை கண்டார். ''எனக்கு ஏற்பட்டது போன்ற தண்ணீர் தாகம்தான் இந்த நாய்க்கும் ஏற்பட்டிருக்கிறது"" என்று கூறிய அந்த மனிதர் கிணற்றில் இறங்கி தனது காலணியில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்து நாயின் தண்ணீர் தாகத்தைத் தீர்த்து வைத்தார். அவர் செய்த இந்த செயலுக்காக அவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னித்தான்"" என சொல்லி முடித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்த்து நபித்தோழர் ஒருவர் ''அல்லாஹ்வின் தூதரே, நாய் போன்ற விலங்குகளிடம் கருணை காட்டினாலுமா எங்களுக்கு நன்மை உண்டு?"" என கேட்டார். ''உயிர் வாழும் விலங்கினம் அல்லது மனித இனம் எதுவாக இருந்தாலும் அவைகளிடம் கருணை காட்டுவோருக்கு நன்மைகள் உண்டு"" என முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(ஆதார நூல்: முஸ்லிம் - ஹதீஸ் எண்: 2244 புகாரி – ஹதீஸ் எண்: 2466).

மேலும் இறைவன் மனிதனுக்கு உணவாக அனுமதியளித்த விலங்குகளை மனிதன் தன் உணவுக்காக அறுக்கும்போது கூட விலங்குகள் வலியை உணராதவாறு அல்லது குறைந்த அளவே வலியை உணருமாறு அறுக்கப்பட வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

பாதுகாப்பற்ற அப்பாவி பொதுமக்களின் உள்ளங்களில் பீதியை ஏற்படுத்துவதும் கட்டிடங்களையும் இன்னபிற சொத்துக்களையும் நாசப்படுத்துவதும் வெடிகுண்டுகளைக் கொண்டு ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என மனித வர்க்கத்தை கொலை செய்வதும் ஊனமுற்றோர் ஆக்குவதும் போன்ற பயங்கரவாத செயல்கள் அனைத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட மற்றும் வெறுக்கத்தக்கச் செயல்களாகும் என்பதை மேலே குறிப்பிட்ட இறைத்தூதரின் கூற்றுக்களிலிருந்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமிய மார்க்கம் அமைதியும் கருணையும் மன்னிக்கக் கூடிய மனோபாவமும் கொண்ட மார்க்கமாகும். இஸ்லாத்தின் பெயரால் இஸ்லாமியர்களில் யாரோ சிலர் செய்யக்கூடிய பயங்காரவாத செயல்களுக்கு இஸ்லாமிய மார்க்கமோ அல்லது பெரும்பான்மையான இஸ்லாமியர்களோ கண்டிப்பாக பொறுப்பாக மாட்டார்கள். இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த ஒரு தனி மனிதன் ஏதேனும் ஒரு பயங்கரவாதச் செயலைச் செய்வான் எனில் அவன் இஸ்லாமியச் சட்டத்தை மீறிய ஒரு குற்றவாளியாகவே கருதப்படுவான்.