தொழுவது எப்படி

Tamil • MyIslam24

தொழுகை முறை

உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
இந்த பகுதியில், ‘தொழுகையை நிறைவேற்றுவது’ குறித்த முறைகளை முடிந்தளவுக்கு மிக எளிமையாக தொகுத்திட முயற்சி செய்துள்ளோம். புதிதாய் இஸ்லாத்தை ஏற்ற சகோதர சகோதரிகளுக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள தொழுகை முறைகள் மிக்க ஆதாரபூர்வமானவை ஆகும். அனைத்திற்கும் தக்க குர்ஆன் மற்றும் ஹதீஸ்-லிருந்து ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம்.

தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவி, தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ (அங்கத்தூய்மை) எனப்படும்.

உளூச் செய்யும் முறை:

1. முன் கைகளைக் கழுவுதல் (நூல்: நஸயீ 147 )
2. வாயையும், மூக்கையும் சுத்தம் செய்தல் (நூல்: புகாரீ 160, 164) 
3. முகத்தைக் கழுவுதல் 
4. இரு கைகளையும் முழங்கை வரை கழுவுதல் (நூல்: புகாரீ 160 )
5. தலைக்கு மஸஹ் செய்தல்: அதாவது இரு கைகளையும் கழுவிய பின்னர் ஈரக் கையால் தலையைத் தடவ வேண்டும். இது மஸஹ் எனப்படும். (நூல்கள்: புகாரீ 185, முஸ்லிம் 346) 
6. காதுகளுக்கு மஸஹ் செய்தல்:  ஆட்காட்டி விரல்களைக் காதுகளின் உட்பகுதியிலும், கட்டை விரலை காதுகளின் வெளிப்பகுதியிலும் வைத்து காதுகளுக்கும் மஸஹ் (தடவி சுத்தம்) செய்யவேண்டும். (நூல்: நஸயீ 101) 
7. இரண்டு கால்களையும் கழுவுதல்:  இதன் பின்னர் இரு கால்களையும் கழுவ வேண்டும். முதல் வலது காலையும், பின்னர் இடது காலையும் கழுவ வேண்டும். (நூல்: புகாரீ 140 )
கால்களைக் கரண்டை வரை கவனமாகக் கழுவுவது அவசியமாகும். (நூல்: புகாரீ 160)

எத்தனை தடவை கழுவ வேண்டும்?

தலைக்கு மஸஹ் (ஈர கையுடன் தடுவதல்) செய்வது ஒருமுறை செய்தால் போதுமானது. மற்ற காரியங்கள் அனைத்தையும் மூன்று தடவை செய்ய வேண்டும். (நூல்: புகாரீ 157)
மேற்கூறப்பட்ட காரியங்களை மேற்கூறப்பட்ட வரிசைப்படி செய்வது தான் நபிவழியாகும். இந்த வரிசைப்படி தான் நபி (ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளனர்.

உளூச் செய்ய ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) எனக் கூற வேண்டும் உளூச் செய்து முடித்த பின்னர் கீழ்க்காணும் துஆவை (பிரார்த்தனையை) ஓதவேண்டும். (நூல்: முஸ்லிம் 345) .

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு 
பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை என்று உறுதி கூறுகின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று நான் உறுதி கூறுகின்றேன். 

தொழுகை

தொழுகையில் இரண்டு ரக்அத், மூன்று ரக்அத், நான்கு ரக்அத் என தொழுகையின் அளவுகள் உள்ளன; குறிப்பிட்ட வேளை தொழுகை பொறுத்து தொழுகை அளவு மாறுபடும். அதை குறித்து பிறகு பார்ப்போம். இப்போது இரண்டு ரக்அத் தொழுவது எப்படி என்பதை பார்ப்போம்.

1. கஅபாவை முன்னோக்குதல்



தொழுபவர் மக்காஹ் நகரில் உள்ள காபா என்ற ஆலயம் இருக்கும் திசை நோக்கித் தான் தொழ வேண்டும். (அல்குர்ஆன் 2:144) காபா ஆலயம் தமிழகத்தின் வடமேற்குத் திசையில் இருக்கிறது. இதைக் கண்டுபிடிக்க பல நவீன சாதனங்களும் உள்ளன. இன்னும் பள்ளிவாசலில் தொழுகை நடத்தப்படும் திசையை வைத்தும் அறியலாம். அல்லது ஆன்ட்ராய்ட் செயலிகளில் (Android app), “Qibla Locator/Finder’ என்ற பெயரில் நிறைய செயலிகள் உள்ளன; அதன் மூலமும் கண்டறியலாம்.
[https://play.google.com/store/apps/details?id=com.appstall.qibla.compass]

2. தக்பீர் தஹ்ரீமா

தொழுகைக்காக கஅபாவை முன்னோக்கிய பின், முதலில் அல்லாஹு அக்பர் (இறைவன் மிக பெரியவன்) என்று கூற வேண்டும். (நூல்கள்: புகாரீ 6667, முஸ்லிம் 602)

அல்லாஹு அக்பர் என்று கூறிய பின்னர் இரு கைகளையும் தோள் புஜம் வரை அல்லது காதின் கீழ்ப் பகுதி வரை உயர்த்த வேண்டும். (நூல்: முஸ்லிம் 589)

3. நெஞ்சின் மீது கை வைத்தல்


கைகளை உயர்த்தி, வலது கையை இடது கையின் குடங்கையின் மீது வைத்து நெஞ்சின் மீது வைக்க வேண்டும். அல்லது வலது முன்கையை இடது முன்கையின் மேற்பகுதி, மணிக்கட்டு, குடங்கை ஆகிய மூன்று இடங்களிலும் படுமாறு வைக்க வேண்டும். (நூல்: புகாரீ 740) [வீடியோ ஆதாரம் : https://youtu.be/G4kYVL4t6AQ ]

4. பார்வை எங்கு இருக்க வேண்டும்?


தொழும் போது தரையில் பார்வை இருக்க வேண்டும். பார்வை வானத்தை நோக்கி இருக்கக் கூடாது. திரும்பியும் பார்க்கக் கூடாது. (நூல்கள்: புகாரீ 750, முஸ்லிம் 649)

5. தொழுகையின் ஆரம்ப துஆ

கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் பிரார்த்தனையை ஓத வேண்டும்.

'அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்

பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும்,  ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக! (நூல்: புகாரீ 744)

மேற்கண்ட தொழுகையின் முதல் துஆ ஓதிய பின்னர் திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான சூரத்துல் ஃபாத்திஹா (தோற்றுவாய்) ஓத வேண்டும்.
[சூரத்துல் ஃபாத்திஹா என்பது திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம்; மனனம் செய்யவேண்டியவை பகுதியில் எளிதான முறையில் மனனம் செய்யுமளவு பதிவிடப்பட்டுள்ளது] இந்த அத்தியாயத்தை கண்டிப்பாக தொழுகையில் ஓத வேண்டும் . அதனால் மனனம் செய்துக்கொள்ளுங்கள். ஆரம்பித்தில் கடினமாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால் சற்று முயசித்தால் எளிதாக பல அத்தியாயங்களை மனனம் செய்துவிடலாம்.

6. ஆமீன் கூறுதல்

சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்ததும் 'ஆமீன்' கூற வேண்டும். சப்தமிட்டு ஓதும் தொழுகைகளில் இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி முடித்ததும் இமாமும், பின் நின்று தொழுபவரும் ஆமீன் கூற வேண்டும். (நூல்: புகாரீ 782)

7.துணை சூராக்கள் (அத்தியாயங்கள்):

சூரத்துல் ஃபாத்திஹா ஓதிய பின்னர் குர்ஆனில் நமக்குத் தெரிந்த ஏதேனும் ஒரு முழு அத்தியாயத்தையோ, அல்லது குறிப்பிட்ட அத்தியாயத்தின் சில வசனங்களையோ ஓத வேண்டும். (நூல்கள்: புகாரீ 776, முஸ்லிம் 686.)

உங்களுக்காக பல சிறிய அத்தியாயங்களை தொகுத்து “மனனம் செய்யவேண்டியவை” பகுதியில் கொடுத்துள்ளோம். அவற்றில் (ஆரம்பக்கட்ட முயற்சியாக) ஏதேனும் மூன்று/நான்கு சின்னஞ்சிறு அத்தியாயங்களை மனனம் செய்துக்கொள்ளுங்கள் .

8. ருகூவு செய்தல்


நின்ற நிலையில் சூரத்துல் ஃபாத்திஹா மற்றும் துணை சூராக்களை ஓதி முடித்தவுடன் அல்லாஹு அக்பர் என்று கூறி இரு கைகளையும் காதின் கீழ்ப் பகுதி வரை அல்லது தோள் புஜம் வரை உயர்த்தி ருகூவு செய்ய (குனிய) வேண்டும்.


ருகூவு என்பது குனிந்து இரு கைகளையும் மூட்டின் மீது வைப்பதாகும். அப்போது இரு கைகளும் விலாப்புறத்தில் படாதவாறு நேராக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் தலையையும், முதுகையும் சமமாக வைக்க வேண்டும். தலையைத் தாழ்த்தியோ, உயர்த்தியோ இருக்கக் கூடாது. (நூல்: புகாரீ 735)

இந்நிலையில் இருக்கும்போது பின் வரும் துஆ ஓதவேண்டும்.
"சுப்ஹான ரப்பியல் அழீம்" (மகத்துவமிக்க என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். (நூல்: நஸயீ 1121)
நாம் விரும்பிய அளவு கூடுதலாக எவ்வளவு முறையும் ஓதிக் கொள்ளலாம். (நூல்கள்: புகாரீ 817, முஸ்லிம் 746)

9. ருகூவிலிருந்து எழும் போது


ருகூவிலிருந்து எழும் போது 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா - புகழ்பவரின் புகழ் வார்த்தைகளை அல்லாஹ் கேட்கிறான்' என்று கூறி இரு கைகளையும் தோள்புஜம் அல்லது காது வரை உயர்த்தி, பின்னர் கைகளைக் கீழே விட்ட நிலையில் ரப்பனா லக்கல் ஹம்து என்று கூற வேண்டும். (நூல்: புகாரீ 789)

10. ஸஜ்தா

ருகூவிலிருந்து எழுந்து பின்னர், அல்லாஹு அக்பர் என்று கூறி ஸஜ்தாச் (சாஷ்டாங்கம்) செய்ய வேண்டும்.


கைகளை முதலில் வைக்க வேண்டும். ஸஜ்தாவிற்குச் செல்லும் போது முதலில் இரு உள்ளங்கைகளையும் தரையில் வைத்து, பின்னர் மூட்டுக்களை வைக்க வேண்டும். (நூல்: நஸயீ 1079)

ஸஜ்தாச் செய்யும் போது நெற்றி, மூக்கு, இரு உள்ளங்கைகள், இரு மூட்டுக்கள், இரு பாதங்களின் நுனி விரல்கள் ஆகியவை தரையில் படுமாறு வைக்க வேண்டும்.
இரண்டு கால்களையும் சேர்த்து வைக்க வேண்டும். ஆடையோ, முடியோ தரையில் படாதவாறு தடுக்கவேண்டிய எவ்வித அவசியமுமில்லை.

ஸஜ்தாவில் இரு கைகளையும் காதுகளுக்கு நேராகவோ, அல்லது தோள் புஜங்களுக்கு நேராகவோ வைக்க வேண்டும். இரு கைகளைத் தொடையில் படாமலும் முழங்கை தரையில் படாமலும் உயர்த்தி வைக்க வேண்டும். தொடையும் வயிறும் சேராமல் இருக்குமாறு வைக்க வேண்டும். (நூல்: புகாரீ 812)

ஸஜ்தாவில் பின் வரும் துஆ ஓதிக் கொள்ளலாம்.
சுப்ஹான ரப்பியல் அஃலா (உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்) என்று மூன்று தடவை கூற வேண்டும். (புகாரீ817)
ஸஜ்தாவில் விரும்பிய துஆ(பிரார்த்தனை)க்களைக் கேட்கலாம் ஒருவர் ஸஜ்தாவில் இருக்கும் போது, தான் விரும்பிய துஆவை தாய்மொழியிலேயே கேட்கலாம். (நூல்: முஸ்லிம் 824)

இவ்வாறு இரண்டு தடவை சஜ்தா செய்யவேண்டும்;


இரண்டு ஸஜ்தாக்களுக்கு இடையில் முதல் ஸஜ்தாச் செய்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி எழுந்து அமர வேண்டும். அதில் பின்வரும் துஆவை ஓத வேண்டும் 'ரப்பிக்ஃபிர்லீ ரப்பிக்ஃபிர்லீ' (இறைவா! என்னை மன்னித்து விடு; இறைவா! என்னை மன்னித்து விடு)' (நூல்: நஸயீ 1059)

இந்த துஆவை ஓதி முடித்த பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறி மீண்டும் ஸஜ்தாச் செய்ய வேண்டும். முதல் ஸஜ்தாவில் செய்த பிரார்த்தனையை "சுப்ஹான ரப்பியல் அஃலா - உயர்வான என் இறைவன் பரிசுத்தமானவன்". இரண்டாம் ஸஜ்தாவிலும் கடைப்பிடிக்க வேண்டும். பின்னர் எழ வேண்டும்.
ஸஜ்தாவிலிருந்து எழும் முறை: நாம் சாதாரணமாக எப்படி எழுவோமோ அதைப் போன்று இரு முன் கைகளின் உட்பகுதியைத் தரையில் ஊன்றி எழ வேண்டும்.

தொழுகை ஆரம்பத்திலிருந்து இதுவரை ஒரு ரக்அத் ஆகும்.

11. இரண்டாம் ரக்அத்

முதல் ரக்அத்தை முடித்த பின்னர் மீண்டும் இரண்டாம் ரக்அத்திற்காக எழுந்த பின், முதல் ரக்அத்தில் ஓதிய அனைத்தையும் இரண்டாம் ரக்அத்திலும் ஓத வேண்டும்.

இரண்டாம் ரத்அத்தில் சூரத்துல் ஃபாத்திஹாவை ஓத வேண்டும். அத்துடன் துணை சூராவையும் ஓத வேண்டும்.
பின்னர் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்றே ருகூவு, ஸஜ்தாக்கள் செய்ய வேண்டும். அதில் ஓதவேண்டிய துஆக்களையும் ஓத வேண்டும்.

12. இரண்டாவது இருப்பு:


இரண்டு ஸஜ்தா நிறைவேற்றிய பின், (முதல் ரக்அத்’தில் எழுந்தது போல் எழாமல்) அமர வேண்டும். இடது கையை இடது தொடையின் மீதும், இடது மூட்டுக் கால் மீதும் வைத்து வலது முழங்கையின் மூட்டுப் பகுதியை வலது தொடையின் மீது வைத்து உட்கார வேண்டும். (நூல்: நஸயீ 879)

இந்த இருப்பை/அமர்வை அத்தஹிய்யாத் அமர்வு/இருப்பு என சொல்கிறோம் இந்த அத்தஹிய்யாத் இருப்பில் ஆட்காட்டி விரலைத் தவிர மற்ற எல்லா விரல்களையும் மடக்கி, ஆட்காட்டி விரலை நீட்டிக்கொண்டே இருக்கவேண்டும்; அல்லது அசைத்துக் கொண்டும் இருக்கலாம். அப்போது பார்வை ஆட்காட்டி விரலை நோக்கி இருக்க வேண்டும்.  [video reference:
https://www.youtube.com/watch?v=dfxGpi7dlnI ]

13. இருப்பில் ஓத வேண்டியவை:

இந்த இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். (நூல்கள்: புகாரீ 1202, முஸ்லிம் 609)

அத்தஹிய்யாத் துஆ:
அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹன்னபிய்யு வரஹ்ம(த்)துல்லாஹி வபர(க்)கா(த்)துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன் அஷ்ஹது அ(ன்)ல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு

பொருள்: சொல், செயல், பொருள் சார்ந்த எல்லாக் காணிக்கைகளும்,  வணக்கங்களும், பாராட்டுகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே உங்கள் மீது சாந்தியும், அல்லாஹ்வின் அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் அனைவர் மீதும் சாந்தி உண்டாகட்டும். வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் தூதரும் அடியாருமாவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

14. ஸலவாத்

அத்திஹிய்யாத் ஓதிய பின்னர் ஸலவாத் என்னும் கீழ்க்கண்ட பிரார்த்தனையை ஓத வேண்டும். (நூல்: புகாரீ 3370)

 அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத்.

பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மீதும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிந்ததைப் போல் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும், முஹம்மது (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ அருள் புரிவாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும்,  கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும், இப்ராஹீம் (அலை) அவர்களின் குடும்பத்தாருக்கும் நீ விருத்தி செய்தது போல் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும், முஹம்மத் (ஸல்) அவர்களின் குடும்பத்தாருக்கும் விருத்தி செய்வாயாக! நிச்சயமாக நீ புகழுக்குரியவனாகவும்,  கண்ணியத்திற் குரியவனாகவும் இருக்கிறாய்.

15. பாதுகாப்பு தேடுதல்: (இறுதி அமர்வின் துஆ)

பின்னர் பின்வருபவற்றை ஓத வேண்டும். (நூல்: முஸ்லிம் 924)
'அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாத், வமின் ஷர்ரி ஃபித்ன(த்)தில் மஸீஹித் தஜ்ஜால்.

பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன்.

இறுதி ரக்அத் இருப்பில் விரும்பிய பிரார்த்தனைகளை கேட்கலாம். (நூல்: நஸயீ 1151) தொழுகையின் இறுதியாக அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று கூறியபடி வலது புறமும், இடது புறமும் முகத்தை திருப்ப வேண்டும்.

----------------------------------------------------------------------

இரண்டு ரக்அத் தொழுகைக்கு மேற்கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது வரை கடைபிடிக்கவேண்டும் . மூன்று ரக்அத் தொழுகை என்றால் ஸலவாத் (முறை 14 ) வரை ஓதி விட்டு எழுந்து முன்பு சொன்னது போன்றே தொழவேண்டும்;
இரண்டாம் ரக்அத் முடித்து மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதே போல சூரா பாத்திஹாவை ஓதிவிட்டு ஏதேனும் துணை சூராவையும் ஓதிவிட்டு ருகூ சஜ்தா செய்து விட்டு அந்த குறிப்பிட்ட இருப்பில் அத்தஹிய்யாத் துஆ (முறை 13) ஓதிவிட்டு, ஸலவாத் துஆ (முறை 14) ஓதிவிட்டு, (இரண்டு ரக்அத் தொழுகையில் இறுதியில் ஓதும் துஆவை ,” 'அல்லாஹும்ம இன்னீ .....”) இறுதி துஆவை (முறை 15) ஓதவேண்டும். இதற்கு பின்னர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூறி முகத்தை திருப்ப வேண்டும். இவ்வாறு செய்வது மூன்று ரக்அத் தொழுகை நிறைவேற்றியதாகும்.

----------------------------------------------------------------------

நான்கு ரக்அத் தொழுகையாக இருந்தால் , முதல் ரக்அத் ஐ முடித்துவிட்டு , இரண்டவாது ரக்அத் இல் சூரா பாத்திஹாவை ஓதிவிட்டு ஏதேனும் துணை சூராவையும் ஓதிவிட்டு ருகூ சஜ்தா செய்து விட்டு அந்த குறிப்பிட்ட இருப்பில் அத்தஹிய்யாத் துஆ (முறை 13) ஓதிவிட்டு, ஸலவாத் துஆ (முறை 14) ஓதிவிட்டு, எழ வேண்டும். எழுந்து மூன்றாம் ரக்அத்’திற்கு எழும் போது அல்லாஹு அக்பர் என்று கூறி, எழுந்து இரு கைகளையும் காது வரை அல்லது தோள்புஜம் வரை உயர்த்திக் கைகளை நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதே போல சூரா பாத்திஹாவை ஓதிவிட்டு ஏதேனும் துணை சூராவையும் ஓதிவிட்டு ருகூ சஜ்தா செய்து விட்டு இருப்பில் அமராமல் வெறும் இரண்டு சஜ்தாக்களை செய்துவிட்டு எழ வேண்டும்; எழுந்து சூரா பாத்திஹாவை ஓதிவிட்டு ஏதேனும் துணை சூராவையும் ஓதிவிட்டு ருகூ சஜ்தா செய்து விட்டு, இருப்பில் அமர்ந்து அத்தஹிய்யாத் துஆ (முறை 13) ஓதிவிட்டு, ஸலவாத் துஆ (முறை 14) ஓதிவிட்டு, இறுதி துஆவை (முறை 15)ஓதவேண்டும். . இதற்கு பின்னர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் என்று வலது புறமும், இடது புறமும் கூற வேண்டும். இவ்வாறு செய்வது நான்கு ரக்அத்கள் ஆகும்.

எப்பொழுது எத்தனை ரக்அத் :

பfஜர் (காலை) தொழுகையில் – 2 ரக்அத்
லுஹ்ர் (பிற்பகல்) தொழுகையில் - 4 ரக்அத்
அசர் (மாலைக்கு முன்) தொழுகையில் - 4 ரக்அத்
மக்ரிப் (மாலை) தொழுகையில் - 3 ரக்அத்
இஷா (இரவு) தொழுகையில் - 4 ரக்அத்

ஐவேளைத் தொழுகையின் நேரங்கள்

பfஜர் / சுப்ஹுத் தொழுகையின் நேரம்:

'சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை (நூல்: முஸ்லிம் 1075)

லுஹர் தொழுகையின் நேரம்:

லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சியை விட்டு மேற்கு நோக்கிச் சாய்ந்ததிலிருந்து ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போன்ற அளவு வரும் வரை உண்டு. (நூல்: முஸ்லிம் 1075)

அஸ்ர் தொழுகையின் நேரம்

அஸ்ர் தொழுகையின் நேரம் ஒவ்வொரு பொருட்களின் நிழலும் அது போல ஒரு அளவு வந்ததிலிருந்து சூரியன் மறையத் துவங்கும் வரை உண்டு. (நூல்: திர்மிதீ 138)

மக்ரிப் தொழுகையின் நேரம்

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் முழுமையாக மறைந்ததிலிருந்து மேற்கே செம்மை மறையும் வரை உண்டு. (நூல்: முஸ்லிம் 1076)

இஷாத் தொழுகையின் நேரம்

இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 1074)

பின் குறிப்பு :
உங்கள் பகுதியின் தொழுகை நேரங்களை பின்வரும் லிங்கில் சென்று அறிந்துக்கொள்ளலாம் .
http://www.islamicity.org/prayerTimes/